கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் தோள்களிலும் சிறு சிறு கொப்பளங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த கொப்பளங்கள் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என ராஜ்குமார் நினைத்துள்ளார். ஆனால் திடீரென நேற்று மாடுகளின் தோல் உரிந்ததோடு உடம்பு முழுவதும் காயங்களும் இருந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் மாடுகளை பார்த்தபோது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது தனியார் நர்சரி உரிமையாளர் ஒருவர் என்னுடைய மாடுகள் நாற்றுக்களை சேதப்படுத்தியதாகவும், அதற்காக ரூ. 30,000 இழப்பீடு தர வேண்டும் என்று கூறினார்.
அதற்கு நான் என்னுடைய மாடுகள் நாற்றுக்களை சேதப்படுத்த வாய்ப்பில்லை என்று கூறி இழப்பீடு தர மறுத்ததால், நீ பெரும் அளவு இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக காவல்துறையினரிடம் கூறினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் 40 மாடுகளுக்கும் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், வாயில்லாத ஜீவன்கள் என்று கூட பாராமல் கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.