கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் விதிகளை மீறி வெளியே சுற்றியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறி வெளியே சென்ற கொரோனா நோயாளிகள் 40 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு சுமார் 40 நோயாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் 80%திற்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் ஆவர்.
அவ்வாறு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் சுயதனிமையில் இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அந்த தடையை மீறி கொரோனா தொற்று பாதித்தவர்கள் வெளியே வருவது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதில் திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பேர், மணலியில் ஒருவரும், மாதவரத்தில் ஒருவர், தண்டையார் பேட்டையில் 7 பேர், ராயபுரம் மண்டலத்தில் 7 பேர், திருவிக நகரில் ஒருவர், அம்பத்தூர் மணடலத்தில் ஒருவர், அண்ணாநகர் மண்டலத்தில் 3 பேர், தேனப்பேட்டை மண்டலத்தில் 3 பேர், கோடம்பாக்கத்தில் 3 பேர், வளசரவாக்கம் மண்டலத்தில் 3 பேர், அடையார் மண்டலத்தில் 2 பேரும், பெருங்குடியில் 2 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேர் என 40 பேர் வெளியே சுற்றியது தெரியவந்துள்ளது.