கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்துவதற்காக இஸ்லாமியர்கள் சிலர் தர்காவிற்கு வந்துள்ளனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதன்காரணமாக காவலர்களுக்கும், அங்கு கூடியிருந்த மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அதிகரித்து கலவரமாக வெடித்தது. மேலும் ஹூப்ளியில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தொழுகை நடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட போலீசார் கூட்டம் கூட அனுமதி இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து பலத்த கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வேறு வழியின்றி அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மசூதியின் முக்கிய தலைவர்கள் ஆசாப் மற்றும் யூசெப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மகளூருவில் கர்நாடக எல்லையை கடக்க முயன்ற நபர் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.