குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விழுப்புரத்திலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சைதாப்பேட்டையிலும், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் மனித சங்கிலியில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, ”நாடு முழுவதும் நடக்கும் வன்முறைக்கு மத்திய அரசே காரணம்.
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, தனி நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும், அதைக் கண்டு கொள்ளாத டெல்லி காவல்துறைக்கும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். தமிழக அரசு உடனடியாக தேசியக் குடியுரிமை பதிவேட்டை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ” எனத் தெரிவித்தார்.
சென்னையில் திருவொற்றியூர் தேரடி தொடங்கி தாம்பரம் வரையிலான மனித சங்கிலி மொத்தம் 40 கிமீ தூரத்திற்கு நடத்தப்பட்டது. இதில் பெண்கள், சிறுவர்கள் என பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், திமுகவின் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோரும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.