400 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டனூர் பகுதியில் கோவில் பூசாரியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வயலூர் குமரன், தாமரைக்கண்ணன் ஆகியோர் புதுக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நடுக்கல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் நாசிக் கூடும், இடதுபுறம் கொண்டை சரிந்து, இடையில் கச்சையுடன் கூடிய குருவாளும், காதுகளில் அணிகலன்கள் மற்றும் மார்பில் ஆபரணங்கள் அணிந்தவாறு காணப்படுகிறது. இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, நடுக்கல் சிற்பத்தை ஆய்வு செய்த போது அது சந்தன சூரன் சதா சேர்வை என்ற வீரனின் நினைவாக வைக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. நாயக்கர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் போரில் சிறந்து விளங்கிய வீரர்களின் நினைவாக இந்த நடுக்கல் செதுக்கப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.