ஆப்கானிஸ்தானில் தாக்குதலை ஏற்படுத்தி வந்த 400 முக்கிய தலிபான் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தலிபான் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முயற்சி செய்தபோது அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைநகரான காபூலில் அதிபர் அஸ்ரப் கானி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமாக மிக முக்கியமான 400 தலிபான் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. போரால் ஏற்பட்டுள்ள ரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக போடப்பட்ட தடையை நீக்குவதற்கும், மேலும் 400 தலிபான் கைதிகளை விடுதலை செய்யவும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது.