தரமற்ற மீன்களை விற்பனை செய்தது குறித்து விளக்கம் அளிக்க கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 10 கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 400 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மீன்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக அதிகாரிகள் 8 கடைகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கூறும் போது, காலாவதியான உரிமத்தை புதுப்பிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.