திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறை கீறல்கள் இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வரலாற்று ஆர்வலர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வரலாற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இதில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உருவங்களில் மாடுகளும் அதனை சுற்றி கையில் ஆயுதங்கள் இல்லாமல் மனிதர்களும் காணப்படுவதால் மாடுகளை பிடிப்பது போன்று அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம். இன்றைய ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்த நிகழ்வாக இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற கைபாவனை காணப்படுகிறது.
அதே போல் நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகே உள்ள அணைகட்டி பாறை ஓவியங்களிலும் இதுபோல காட்சிகள் காணப்படுகிறது. இந்த கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4000 வருடங்களுக்கு முந்தைய புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். மேலும் இது போன்ற உருவங்கள் வெகு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் இதனை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல்வேறு தகவல்களை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.