விழுப்புரம் மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது “காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று வருகின்றது. மேலும் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் ஈர பதத்தின் அளவு 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதை மாற்றி கொள்ள வேண்டும்.
ஈரப்பதத்தின் அளவு 22 சதவீதம் வரை இருந்தாலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் தற்போது பெய்து வரும் இந்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35000 வழங்கப்பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்வதில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும் தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தற்போது மத்திய மாநில அரசுகள் சேர்ந்து கரும்பு டன் ஒன்றுக்கு 2900 ரூபாய் தான் வழங்குகின்றன. இது குறித்து தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி மாநில, பொதுச் செயலாளர் சுவாமி நடராஜன் சிறைப்புரையாற்றியுள்ளார். மேலும் இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.