பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் இந்நிலையில், பிரதமர் போட்டியிலிருக்கும் வேட்பாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு ஆளான வண்ணம் இருக்கிறார்கள். மக்கள் உணவுக்கும், தண்ணீருக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், ரிஷி சுனக் தனது வீட்டில் 400,000 பவுண்டுகள் செலவில் நீச்சல் குளம் கட்டியுள்ள விடயம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள், ரிஷிக்கு போட்டியாக பிரதமர் போட்டியிலிருக்கும் லிஸ் ட்ரஸ் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பிரித்தானிய பணியாளர்கள், வெளிநாட்டுப் பணியாளர்களைவிட சோம்பேறிகள் என பொருள்படும் வகையில் லிஸ் ட்ரஸ் பேசிய இரகசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், பிரித்தானிய பணியாளர்கள் வெளிநாட்டவர்களைவிட குறைவாக உற்பத்தி செய்வதற்கு ஒரு காரணம், அவர்களுடைய மனோபாவம் என்று கூறும் லிஸ் ட்ரஸ், அவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும் என்னும் பொருளில் பேசியிருக்கின்றார்.
பிரித்தானிய பணியாளர்கள் சோம்பேறிகள் என்கிறார் லிஸ் ட்ரஸ், என லேபர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளார். இப்படியே போனால், யார் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டுக்கு நன்மை நடக்கும் என்று யோசிப்பதற்கு பதில், யார் குறைவான சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள் என்றோ, அல்லது பேசாமல் போரிஸ் ஜான்சனே பிரதமராக இருந்துவிட்டுப் போகட்டும் என்றோ கன்சர்வேட்டிவ் கட்சியினர் முடிவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டுவிடும் என்று போலிருக்கிறது.