கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 326 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 354 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். மேலும், இந்திய ரயில்வே 2,500 பெட்டிகளில் 40,000 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை தயார் செய்துள்ளது.
ஊழியர்கள் தினமும் 375 தனிமை படுக்கைகளை உருவாக்கி வருகின்றனர் என்றும் இந்த நடைமுறை நாடு முழுவதும் 133 இடங்களில் நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளஸ்டர் கட்டுப்படுத்தலுக்கான ஒரு யுத்தியை அரசாங்கம் பின்பற்றி வருகிறது மற்றும் நிர்வாக சரிவிற்கு இந்த யுக்தி சாதகமான முடிவுகளைத் தருகிறது. குறிப்பாக ஆக்ரா, கௌதமபுத்தா நகர், பத்தினம்திட்டா, பில்வாரா மற்றும் கிழக்கு டெல்லியில் பின்பற்றப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை பெரிய திருப்திகரமாக உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் நிலை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் விரிவான ஆய்வு நடத்தியதாக உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தல் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அவர் உத்தரவுகளை வழங்கியதாக கூறியுள்ளார்.