அரசின் தொடக்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 415 தனியார் பள்ளிகள் வருகிற கல்வியாண்டில் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
தொடக்க கல்வித்துறையில் செயல்பட்டு வரும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு உரிய அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால் அந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காத பற்றி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.