இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பததற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் வாங்கிக் கொண்டு நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.. இந்த நிலையில் இன்று கரை திரும்பும் நிலையில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப் படகுகளையும், 42 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்…
இதனை சக மீனவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, கரைக்கு திரும்பியவுடன் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சிறைபிடித்த 42 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 42 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர் சங்கங்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசர ஆலோசனையில், இன்று முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். மேலும் நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளது.