கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் நான்கு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல கேரளாவிலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 425 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதுதவிர 20 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது என்று சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சீனா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்பதே நாள்களில் அங்கு அதிநவீன மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆயிரம் படுக்கைகளுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சைப் பிரிவுகளும் இங்கு உள்ளன. நேற்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள். சுமார் 7000 தொழிலாளர்கள் இந்த மருத்துவமனையை ஒன்பது நாள்களில் கட்டி முடித்துள்ளனர்.
இதனிடையே சீனாவுடனான பயணிகள் ரயில் சேவையை தாங்கள் நிறுத்தியுள்ளதாக ரஷிய ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதியன்று, ரஷிய ரயில்வே சீனாவுடன் பயணிகள் ரயில் சேவையை தடைசெய்தது. அப்போது மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மட்டும் நேரடி ரயில் சேவை செயல்பட்டது. இப்போது, இந்த சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.