குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் பலியாகியிருப்பதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஈரான் நாட்டுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 22 பேர் பலியாகியிருப்பதும், 141 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.