விழுப்புரம் அருகே 4,300கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகில் வீரமூர் சிவன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டு வாசலின் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையில் உடனே பறக்கும் படையினர் விரைந்து சென்று அந்த இடத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 86 சாக்கு மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இந்த மூட்டைகளில் மொத்தம் 4,300 கிலோ அளவுக்கு ரேஷன் அரிசி இருந்துள்ளது.
இதனையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விழுப்புரத்திலுள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நபர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், விழுப்புரம் வண்டிமேட்டில் வசிக்கும் முபாரக் அலி, அவரின் மகன் சுபீர்அலி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரேசன் (29) ஆகியோர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூவரும் வீரமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் பேசி குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கிவிட்டு அதனை மாவு போல் ஆக்கி வெளிசந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிரேசனை கைது செய்த நிலையில், மேலும் முபாரக்அலி மற்றும் அவரது மகன் சுபீர்அலி ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.