சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான ‘தம்பி’ என்ற வேஷ்டி சட்டை அணிந்த குதிரை உருவ சின்னத்தை தயாரிக்கும் பணி சென்னை சாலிகிராமத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, நகரின் முக்கிய இடங்களில் நிறுவ, சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராஜா, ராணி வடிவங்களையும் 15 அடியில் உருவாக்கி வருவதாக அதனை தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.