சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியின் தொடக்க விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல இருந்தார். ஆனால் திடீரென முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதன் பிறகு முதல்வர் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுப்பதற்கு வர முடியாததற்கு வருத்தம் தெரிவித்ததோடு, 28-ஆம் தேதி நடக்க இருக்கும் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வருமாறு செல்போனில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வருக்கு பதிலாக பிரதமர் மோடியை அழைப்பதற்காக தி.மு.க எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர் பொய்யா மொழி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் டெல்லிக்கு சென்றனர். இவர்கள் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தம்பி சின்னத்தையும் பிரதமரிடம் வழங்கினார்கள். மேலும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பிரதமர் மோடியிடம் கூறினர்.