திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி பள்ளியில் 1978 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி புகழ்ந்து பேசினார். 100 மாணவர்கள் மற்றும் கல்வி கற்பித்து கொடுத்த 25 ஆசிரியர்கள், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் பள்ளிக்கால பழைமையான நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.
மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் மூலம் தங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கியதால் நாங்கள் இப்போது பள்ளி தாளாளர்களாகவும்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் சாதனை படைக்க முடிந்தது என கூறினார். அதன் பிறகு மாணவர்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதனையடுத்து ஆசிரியர் ஒருவர் முன்னாள் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
44 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களாக இருந்தவர்கள் இப்போது ஆசிரியர்களாக பணியாற்றியிருப்பதை கண்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்களுடைய உழைப்பு வீண் போகவில்லை என்று கூறி முன்னாள் மாணவர்களை கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டனர். இந்த சம்பவம் அந்த பள்ளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.