ஒரு மாணவர்கள் கூட சேராத 45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினார்.
பின் இது குறித்து பேசிய கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 1248 பள்ளிகளை அரசு மூடுவதாக வெளியான தகவல் தவறானது என்று கூறிய அவர், தமிழகத்தில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ஆகையால் அந்தப் பள்ளிகளை மட்டும் தற்காலிக நூலகங்களாக மாற்ற அரசு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த 45 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப் படுவார்கள் என்றும், இதனால் ஈராசிரியர் கொண்ட பள்ளிகள் 4 ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்படும் என்று கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதையடுத்து நூலகங்களாக மாற்றப்பட்ட பள்ளிகளில் மீண்டும் ஆறு மாதத்திற்கு பின்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், மாணவர்கள் சேரும்போது பள்ளிகள் செயல்பட துவங்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.