480 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு உத்தரவின் படி மதுவிலக்கு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் சேராப்பட்டு, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீவாத்து மூலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவைகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் 60 லிட்டர் கொள்ளளவுடைய 8 லாரி டியூப்களில் 480 லிட்டர் சாராயம் கடத்தி வந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சசிகுமார், சந்தோஷ்குமார் என்பதும், இவர்கள் கல்வராயன் மலையிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து மலையின் அடிவாரப் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 480 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.