திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல பகுதிகளில் வசித்துவரும் நெசவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்நிதி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிமிக்க பொருட்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அதன் பிறகு பொதுமக்கள் முதலீடு செய்யும் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வட்டி எனவும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்டுவோருக்கு கார் பரிசாக அளிப்போம் என்றும், கவர்ச்சி மிக்க திட்டங்களை அந்நிதி நிறுவனம் அறிவித்தனர். அதனால் அப்பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் அதிகப்படியான பணத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். அதனால் இந்த நிதிநிறுவனம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் சரியான தேதியில் அந்நிதிநிறுவனம் வட்டியை முதலீட்டாளர்களுக்கு அளித்து வந்தது. பின்பு வட்டி பணத்திற்கு பதிலாக சிறிய சீட்டில் எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தங்களுடைய பணத்தை திருப்பித் தருமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளார்கள். ஆனால் அந்த நிதி நிறுவனம் சரியாக பதில் கூறவில்லை. இதனால் நேற்று சந்தேகம் அடைந்த 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் திருத்தணி மாங்காடு அருகே செயல்பட்டு வந்த அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றார்கள். அப்போதுதான் அந்த அலுவலகத்தில் இருந்து அனைவரும் மாயமான தகவல் முதலீட்டாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தால் தாங்கள் பண மோசடி செய்யப்பட்டதை தெரிந்து கொண்டபொதுமக்கள், அந்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தங்களுடைய பணத்தை திருப்பித் தரக்கோரி சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் விசாரணை நடத்தி இதைப் பற்றிய விவரங்களை திருவள்ளூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக இயங்கிவரும் குற்றப்பிரிவு துறையில் புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.