மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனை அறிக்கையின் படி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமராவதி மாவட்ட ஆட்சியர், ஷேலேஷ் நவால் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை உள்ளது.
ஆந்திர பிரதேசம்: கடந்த 12 மணி நேரத்தில் (இன்று 10.30 மணி வரை), ஆந்திராவில் 16 பேருக்கு புதிதாக கோவிட் -19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கிருஷ்ணா, கடப்பா ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர், குண்டூர் மற்றும் கர்னூல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், சித்தோர் மற்றும் பரகாசம் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என ஆந்திர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.