தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா என இன்று மட்டும் 14,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளதா என இதுவரை 2,02,436 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் 13 முதல் 60 வயதிற்குட்பட்டோர் 4,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு அதிகமானோர் 393 பேரும், 12 வயதிற்குட்பட்டோர் 273 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த 56 வயது பெண், மற்றும் சென்னையை சேர்ந்த 48 வயது பெண் ஆகிய இருவர் இன்று மரணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.