அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலின் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் குழந்தையை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை அறிக்கையில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஷாடோலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் ராஜேஷ் இது குறித்து கூறுகையில், “குழந்தைகளின் இறப்பு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் ஏதேனும் அலட்சியப் போக்கு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்து” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மூத்த சுகாதார அலுவலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இந்த ஜனவரியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அப்போதே சுகாதார அமைச்சர் துளசி சிலவத்தின் அறிவுறுத்தலின் பேரில் தலைமை மருத்துவ சுகாதார அலுவலர் மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.