ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டுள்ளது.
அப்போது கோவிலின் செயல் அலுவலர் ஜான்சிராணி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டது. அதன்படி உண்டியலில் மொத்தம் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் பணமும், 49 கிராம் 500 மில்லி தங்கம், 135கிராம் வெள்ளியும் இருந்ததாக அறநிலையத்துறை சார்பில் தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உண்டியல் பணம் எண்ணியதில் 28,92,750 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.