அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,083,048 பேர் பாதித்துள்ளனர். 134,603 பேர் உயிரிழந்த நிலையில், 510,187 பேர் குணமடைந்துள்ளனர். 1,438,258 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 51,142 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,482கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 28,529ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி 644,089 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 48,701 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இது வரை இல்லாத அளவாக நேற்று தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,407 பேர் இறந்துள்ளதால் கடந்த இரண்டு நாளில் மட்டும் 4889 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.