லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சமுட்டிகுப்பம் பகுதியில் ரவுடியான ஸ்ரீகாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் என்பவர் ஸ்ரீகாந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பகுதி சான்றிதழ் வாங்குவதற்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஸ்ரீகாந்துக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்க முடியாது என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஸ்ரீகாந்த்தை சிறையில் அடைக்காமல் ஷியாம் சுந்தர் தனது சொந்த ஜாமினில் அவரை விடுவித்தார். மேலும் அதற்கு ஷியாம் சுந்தர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக ஜாமினில் விடுவிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொள்ள இன்ஸ்பெக்டர் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ஸ்ரீகாந்த் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை ஸ்ரீகாந்த் நேற்று இரவு ஷியாம் சுந்தரிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷியாம் சுந்தரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.