சென்னை டி.பி சத்திரம் பகுதியில் 48 வயதான பெருமாள் என்பவர் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பெருமாளை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவருக்கு குட்கா சப்ளை செய்யும் நபர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக, பெருமாளிடமிருந்து செல்போனை வாங்கி சோதனை செய்தபோது அதில் பல சிறுமிகளிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருவருமே பெருமாள் தவறான தொடர்பில் இருந்து தெரியவந்துள்ளது. அதில் ஒரு பெண்ணின் ஒன்பது வயது மகளிடம் பெருமாள் அத்துமீறியுள்ளார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுமியின் தாய் பெருமாளுடன் தொடர்பு நின்றுவிடும் என்று நினைத்து அதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். இவ்வாறு அந்த சிறுமியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்ற பெருமாள் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 4 வயது சிறுமிகள் முதல் 17 வயதான சிறுமிகள் வரை 5 குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
சிறுமிகளிடம் அன்பாகப் பேசுவது போல நடித்து அவர்களிடம் பாலியல் அத்துமீறுவது இவருடைய வழக்கமாக இருந்துள்ளது என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாளையும் அவருடைய இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.