சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை ஆவாரம்பாளையத்தில் சரவணகுமார்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் இணைந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் டெபாசிட் மூலமாகவும், ஏலச்சீட்டு என்ற பெயரிலும் லட்சக்கணக்கில் முதலீடு பெற்றுள்ளனர்.
ஆனால் முதலீடு செய்த தொகையை திரும்ப கொடுக்காமல் சீட்டு கம்பெனியை மூடிவிட்டு சரவணக்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். சுமார் 175 பேரிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.