Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“5 மணி நேரம், 500 பேர்” நடு ரோட்டில் பந்தல்…. திருப்பத்தூரில் திடீர் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி  நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அப்பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில் மலை சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த இடத்தில் நடந்த விபத்துகளால் 1 ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்வதற்கு கூட போதுமான இடவசதி இல்லாததால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஒதுங்கும்போது கீழே விழுந்து விடுகிறார்கள். இதன் காரணமாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த புதிய தார்சாலை போடப்பட்டதால் சாலையின் உயரம் 2 அடி உயர்ந்துவிட்டது. இதனால் வாகனங்களை பள்ளத்தில் இறக்கும்போது விபத்து ஏற்படுவதோடு, எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதோடு தார் சாலை போட்டதிலிருந்து அடிக்கடி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி விடுகிறார்கள். இந்நிலையில் நேற்றும் ஒரு விபத்து நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பந்தல் அமைத்து சுமார் 5 மணி நேரமாக போராடினர். இதனால் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இது தொடர்பாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினருக்கும்,   காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் சாலையை அகலப்படுத்தும் பணிகள் முடிவடையும் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.

Categories

Tech |