சீட்டு பணம் கொடுக்கவில்லை என்பதால் நிதி நிறுவனத்தில் தீக்குளிக்கப் போவதாக நகை கடை ஊழியர் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் குமராட்சி மெயின் ரோடு சாலையில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்(53). இவர் குமராட்சி பகுதியில் இருக்கின்ற நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனது மகளின் திருமண செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் ரூ 10 லட்சம் சீட்டு கட்டினார். அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் வைக்க முடிவு செய்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ரூ 7,50,000-க்கு சீட்டு எடுத்தார். அப்போது 7 பேர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் அல்லது பணத்திற்கு ஈடாக சொத்து பத்திரம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பன்னீர்செல்வம் தனது வீட்டின் சொத்து பத்திரங்களை வழங்கியுள்ளார். ஆனால் ஐந்து மாதங்கள் தாண்டியும் இதுவரை நிதி நிறுவனத்திலிருந்து சீட்டு பணம் வழங்கவில்லை. இதனால் கோபமடைந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் காலை பெட்ரோல் கேனுடன் நிதி நிறுவனத்திற்கு வந்தார். தனக்கு சீட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போது அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பணத்தை உடனே தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதனையடுத்து பன்னீர்செல்வம் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.