பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அண்ணாநகரில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கசெல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் என்பவர் தங்கசெல்வியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்கசெல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கூட்டப்பனை சுனாமி நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பன் என்பவர் பச்சிளம் குழந்தையை 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இதனையடுத்து மாரியப்பன் கேரள மாநிலத்தில் வசிக்கும் குழந்தை இல்லாத செல்வகுமார்-சந்தன வின்சியா என்ற தம்பதியினரிடம் குழந்தையை விற்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை வாங்கிய தம்பதியினர் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றபோது குழந்தை விலைக்கு வாங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் திருநெல்வேலியில் இருக்கும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சர்ச்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் இருந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தங்கசெல்வி, செல்வகுமார், சந்தன வின்சியா, மாரியப்பன் ஆகியோரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று குழந்தையின் தந்தை அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர்.