தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை குறித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “அண்மையில் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் திமுகஅமோக வெற்றி பெற்றிருப்பது இந்த ஐந்து மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ஆகும். இந்த சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்லாது, செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மக்கள் இவ்வெற்றியை நமக்கு தந்துள்ளனர். திமுக ஆட்சியை அமைக்கும் பொழுது கொரோனா தொற்றானது வேகமாக பரவிய காலமாக இருந்தது.
அப்பொழுது மருத்துவ நெருக்கடி ஒரு புறம் பண நெருக்கடி மறுபுறம் என்று பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் திமுக அரசு ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தி உள்ளோம். மேலும் மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதி உதவியும் அளித்திருந்தோம். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம். நாம் ஆட்சியை அமைக்கும் பொழுது ஏற்பட்ட நிதி நெருக்கடியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முந்திய ஆட்சி நடத்திய கட்சியானது கஜானாவை காலி செய்ததோடு மட்டுமல்லாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி வட்டி மேல் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலையில் ஆட்சியை கலைத்து விட்டு சென்றுள்ளது.
திமுக 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையையை இந்த ஐந்து மாதத்திலேயே மக்களிடமிருந்து பெற்றிருப்பதை பெருமிதமாக உணருகிறேன். மேலும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வேண்டிய திட்டங்களை இந்த ஐந்து மாதத்தில் நிறைவேற்றியது மறுக்க முடியாது. இந்த மாபெரும் வெற்றிக்கு கடுமையாக உழைத்த திமுக செயலாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் அனைத்திற்கும் மேலான திமுகவில் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் தொண்டர்கள், அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.