ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு 7 நாள்கள் மலர்கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கவில்லை. இந்த வருடம் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாதுறை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் ஏற்காட்டில் வருகின்ற 26 ஆம் தேதி கோடை விழா, மலர் கண்காட்சி ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த வருடம் நடைபெறும் கோடைவிழா சுற்றுலா பயணிகளை கவர்கின்ற வகையிலும், ஏற்காட்டை மேம்படுத்துகின்ற வகையிலும் இருக்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றன.
அதில் குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏழு தினங்களும் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்கப்படவுள்ளது. கோடை விழாவை சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிப்பதற்கு வசதியாக சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேருந்துகள் செயல்படும். ஏற்காட்டில் முக்கியமான இடங்களை ஒரு தினம் முழுவதும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
கோடை விழாவின் போது ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கின்ற வகையில் வாகனங்கள் சென்று வருவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஏற்காட்டிற்கு செல்கின்ற போது வழக்கமான சேலம் ஏற்காடு ரோடு வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து திரும்பி வருகின்ற போது ஏற்காட்டிலிருந்து குப்பனூர் சென்று அங்கிருந்து சேலம் வருகின்ற வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில் அனைத்து அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் கோடை விழாவில் வைக்கப்பட உள்ளது.
மேலும் இதை தவிர சுற்றுலாப் பயணிகள் மகிழும் வகையில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் பங்கேற்று விளையாடும் போட்டிகள் என பல வகையான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் மலர் கண்காட்சியில் எப்படியெல்லாம் மலர் அலங்காரம் செய்யலாம் என்று கடந்த 10 தினங்களாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 1500 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அப்போது நிறைய பேர் மேட்டூர் அணை போன்று மலர்களால் வடிவம் அமைக்கலாம் என்று கருத்து கூறினார்கள். எனவே இந்த வருடம் மலர் கண்காட்சியில் மேட்டூர் அணை இருப்பதுபோல மலர்களால் வடிவமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது. இதை தவிர இரண்டு தினங்கள் பழங்கள் கண்காட்சி, இரண்டு தினங்கள் காய்கறிகள் கண்காட்சி வைக்கலாம் என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.