சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூரு போக தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிப்பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின்படி அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி விசாரித்தனர். அதன்பின் 5 வயது சிறுமி வைத்திருந்த கைப்பையை எடுத்து பிரித்து பார்த்தனா்.
அதற்குள் வெடிக்காத ஒரு துப்பாக்கி தோட்டா இருந்ததை கண்டுபிடித்தனா். பின் அந்த தோட்டாவை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களின் பயணத்தை ரத்துசெய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றேன். சுற்றுலாவை முடித்துவிட்டு துபாய் வழியே சென்னை வந்து பெங்களூரு போக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்ததாகவும், அது துப்பாக்கி தோட்டா என தெரியாமல் எடுத்து குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாவை ஆய்வு மேற்கொண்டபோது, அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு பெரிய துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய 9 எம்.எம் ரகம் வகையை சேர்ந்தது என தெரிந்தது. அதன்பின் துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த அதிகாரியிடம் எழுதி வாங்கிகொண்டு எச்சரித்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனா்.