இந்திய பிரதமரும் ஒரு குழந்தையும் உரையாடிய சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் எதிர்கட்சிகளின் அமளிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் எம்.பி அணில் பிரஜியோ தன்னுடைய குடும்பத்துடன் பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அணில் பிரஜியோவின் 5 வயது மகள் அஹானாவிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த குழந்தையிடம் பிரதமர் நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு குழந்தை ஓ எனக்கு தெரியுமே நீங்கள்தான் மோடிஜி. உங்களை நான் தினமும் டிவியில் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு நான் என்ன செய்கிறேன் என்று உனக்கு தெரியுமா என்று பிரதமர் கேட்டுள்ளார். அதற்கு குழந்தை லோக்சபாவில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்று கூறினார். இதைக் கேட்ட உடன் பிரதமர் மோடி உட்பட அங்கிருந்த அனைவருமே வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பாக எம்.பி அணில் பிரிஜியோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் என்னுடைய குடும்பத்துடன் பிரதமர் மோடியை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், என்னுடைய 2 மகள்களும் பிரதமரின் அன்பை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எம்.பி அணில் பிரஜியோ அமைச்சர் நிதின் கட்காரியிடம் தொகுதி வளர்ச்சிக்காக நிதி உதவி கேட்டபோது, உங்கள் உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். இதனால் அணில் பிரஜியோ தன்னுடைய தொகுதி வளர்ச்சிக்காக நிதி வாங்க வேண்டும் என்பதற்காக 15 கிலோ வரை எடையை குறைத்து விட்டு எனக்கு 15000 கோடி வரை நிதி ஒதுக்கங்கள் என்று நிதின் கட்காரியிடம் கேட்பதற்கு உரிமையுள்ளது என்று கூறி ஒரே நாளில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிரதமரும் குழந்தையும் உரையாடிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.