மலேசியாவில் 18வது மாடியிலிருந்து தாயொருவர் ஐந்து வயது குழந்தையுடன் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த மென் பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து 16ஆம் தேதி மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா உறுதியானது. மூவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த 17ஆம் தேதி சத்யா பாய் மூச்சு திணறலுடன் அவதிப்பட்டு தனது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தங்களை கவனித்துக் கொள்ள யாருமில்லை, எங்களுக்கு உதவ யாரும் இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். கணவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளதாக அவர் கூறினார். பின்னர் அடுத்த நாளே அவர் தனது ஐந்து வயது மகளுடன் வீட்டின் 18வது மாடியில் இருந்து கீழே குதித்து துடிதுடித்து உயிரிழந்தார். இந்த தகவலை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து ரவிராஜாவும் கடந்த சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவிராஜா உயிரிழந்த தகவல் கேட்ட உறவினர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் உயிரிழப்பால் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். தங்கள் மகன், மருமகள், பேத்தி ஆகியோருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு அவர்களது அஸ்தியை தமிழகம் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.