உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முரளி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான பழனிச்சாமி இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் சோதனை சாவடி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 3 சரக்கு வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியும் சாலையில் கவிழ்ந்த நிலையில், சரக்கு வாகனங்கள் தடுப்புகள் மீது ஏறி நின்றன.
மேலும் இடிபாடுகளில் சிக்கி முரளி, பழனி, சங்கர், மோனா உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பின்னர் மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.