5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து கல்வியாளர்களுடன் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன், 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது கல்வித்தரம் உயர்த்தவே பொதுத்தேர்வு நடத்தும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் 3 ஆண்டுகளுக்கு இடைநிற்றல் இருக்காது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்ததாகவும் அவர் கூறினார். 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து கல்வியாளர்களுடன் கலந்தாலோசிக்கும்படி அமைச்சரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் ,ஆலோசனை செய்ய அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
இதுபற்றி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கையில், ”இந்தாண்டு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமில்லை. திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடைபெறும். மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தினால்தான் அது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்” என்றார்.