தமிழகத்தில் ஐந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு நற்பணிகள் செய்த 35 பள்ளிகளை தேர்வு செய்து அதில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஐந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் அதை கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தேர்ச்சி பெறுவார்கள்,
அதனை உறுதி செய்யும் வகையில் அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்றும் பொது தேர்வானது குழந்தைகளின் திறனை கண்டறிவதற்கு தானே தவிர அவர்களை தேர்ச்சி பெறாமல் செய்து அவர்களது படிப்பை பாதியில் நிறுத்துவதற்காக அல்ல என்று அவர் தெரிவித்தார்.