அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார்.
மேலும் 2 பேர் வாகனங்கள் ஓட்டும் போது புயல் காற்றுக்கு மத்தியில் சிக்கி வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 42 வயதான பெண் ஒருவர் பலி ஆனார். இதுவரை புயல் தாக்கியதில் 5 பேர் பலியானதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். புயல் பாதித்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.