பெருங்கொளத்தூரில் வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையர்கள் இருவரிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரம், புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால், காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று பீர்க்கன்காரணை காவல்துறையினர் பெருங்களத்தூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது அதிகளவில் சில்லறைக் காசுகளும், பணமும் இருந்ததால் காவல்துறையினர் பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ்(29) ஜோதிபாசு(30) என்பது தெரியவந்தது. இருவர் மீதும் பரங்கிமலை, அடையாறு, மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் பெருங்களத்தூர் தேவநேசன் தெருவிலுள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து, ரூ.40 ஆயிரம் ரூபாய் கொள்ளை, பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் 8 சவரன் நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், இரண்டு எல்இடி டிவிகள், பெருங்குளத்தூர் சாந்தி நகரில் 3 சவரன் தங்க நகை, இரண்டு இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை இருவரும் சேர்ந்து கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 9 சவரன் தங்க நகைகள், மூன்று இருசக்கர வாகங்கள், இரண்டு எல்இடி டிவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.