காசோலை மோசடி வழக்கில் பெண் வணிகவரித்துறை ஊழியருக்கு பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தனிக்கொடி. இவருடைய மகன் தயாளன் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வணிகவரிதுறை அலுவலகத்தில் உதவி எழுத்தாளராக பணியாற்றிய லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் ரூபாய் ஐந்து லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தயாளனிடம் காசோலையை வழங்கியுள்ளார்.
அந்த காசோலையை எடுத்துக் கொண்டு தயாளன் தனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் லதாவின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பதால் காசோலை திரும்பியுள்ளது. இதற்கிடையில் லதா திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் தயாளன் தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் லதா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூபனா லதாவுக்கு 10 மாதம் சிறை தண்டனையும் அளித்து கடனாக பெற்ற ரூபாய் ஐந்து லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து திரும்பச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.