கரும்புத் தோட்டத்துக்குள் நுழைந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாகியது .
மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் ஓன்று உள்ளது. இங்கு விவசாயிகள் நேற்று காலை கரும்பு அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கரும்பு தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பாம்பை கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, அங்கிருந்த ஒரு புதருக்குள் சென்றது. பாம்பை கொல்வதற்காக, செடியும், செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் அவர்கள் தீ வைத்ததும் தீ மளமளவென்று எரிந்தது. இந்த தீயில் பாம்புடன் சேர்ந்து அந்த இடத்தில் இருந்த 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாயின.
தீ முழுவதுமாக எரிந்து முடிந்ததும் சிறுத்தைக் குட்டிகள் இறந்து கிடப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, பலியான சிறுத்தை குட்டிகளைக் கைப்பற்றினர். அந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து 15 நாள் – 20 நாட்கள் ஆகியிருக்கலாம் என வனத்துறை அதிகாரியான பிரஜோத் பால்வே தெரிவித்தார். மேலும் தாய் சிறுத்தை வெளியே சென்றிருக்கும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. தாய் சிறுத்தை திரும்பி வரும் போது ஊருக்குள் வர அதிக வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பில் இருக்கிறோமென்றும், சிறுத்தைப் பழிவாங்கும் என்று விவசாயிகள் மீண்டும் இந்தப் பகுதிக்கு வரப் பயப்படுகின்றனர்’’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த பகுதியில், கரும்புத்தோட்டத்தில் இருந்து இதற்க்கு முன்னதாக 2 சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.