பெண்ணை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டி பகுதியில் ராஜபாண்டி – அபிராமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து அபிராமி தனது தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேலுச்சாமி, அவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகள்கள் மாலதி, சுகந்திரியா, நித்தியா ஆகியோர் அபிராமியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் அபிராமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அபிராமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அபிராமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அபிராமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் வேலுச்சாமி உட்பட 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.