சபரிமலை கோவிலுக்கு செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் .
கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்ற போது கேரளாவில் பாஜக , இந்து அமைப்புகள் , பக்தர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு பெண்களும் சபரிமலையில் வழிபட்டனர்.
இதையடுத்து கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய் மனு தாக்கல் செய்யப்பட்டு அது 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறை குவிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கேரளா அரசு தெரிவித்து வந்த நிலையில் , சபரிமலை செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். சமூக ஆர்வலர் திருப்பதி தேசாய் , பிந்து உட்பட 5 பேர் கொண்ட குழு கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.