ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 -ன் கீழ் (ஆள்கடத்தல்), 376 -ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆல்வாரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடித்த நிலையில் நீதிபதி அஜய் குமார் சர்மா இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக ராஜ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு அரிதினும் அரிதானது என்பதால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது என சிறப்பு வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.