போலீஸ்காரர் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் நகலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 2 நாட்கள் விடுப்பு எடுத்து வேலுசாமி வீட்டில் இருந்துள்ளார். ஆனால் விடுமுறை முடிந்த பிறகு அவர் பணிக்கு செல்லவில்லை.
இதற்கிடையில் மல்லியதுர்க்கம் கோன்பாறை என்ற இடத்தில் உள்ள எஸ் வடிவ மலைப்பாதையில் வேலுச்சாமியின் கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பள்ளத்திலிருந்து ஐயோ அம்மா என்று முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் காவல்துறையினர் எட்டி பார்த்த போது படுகாயத்துடன் வேலுசாமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த வேலுச்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் மருத்துமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த வேலுசாமி 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.