காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைபாலம் உடைந்து கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதால் பேரிடர் மீட்பு குழுவினர் ஆயத்தமாக உள்ளனர். இந்நிலையில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தரைப்பாலம் உடைவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது.
இங்கு 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கனமழை பெய்வதால் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து குரும்பூரில் இருந்து மாமரதொட்டி கிராமத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே புதிதாக பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.